

மோசடியான முதலீட்டு ஆலோசகர் களை தடுக்கும் நோக்கத்துடன் அங்கீகாரம் அல்லாத முதலீட்டு ஆலோசனைகளைத் தடுப்பதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான `செபி’ பரிந்துரை செய்துள்ளது. எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலமாக பங்குச்சந்தை தொடர்பான முதலீட்டு ஆலோசனைகள் வழங்கு வதை தடுப்பதற்கு `செபி’ பரிந்துரைத்துள்ளது. அதுமட்டு மல்லாமல் பங்குச்சந்தை தொடர் பான விளையாட்டுகள், போட்டிகள் நடத்துவதைத் தடை செய்வதற்கும் `செபி’ பரிந்துரை செய்துள்ளது.
முதலீட்டு ஆலோசகர்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் `செபி’ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கீகாரம் இல்லாத முதலீட்டு ஆலோசனைகள், எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் ஊடகங்களின் வாயிலாக முதலீட்டு புராடெக்ட்களை பற்றி கூறுவதைத் தடுப்பதற்கு `செபி’ பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் முதலீட்டு ஆலோசனைகள் குறித்த நன்மை தீமைகளை பற்றியும் ரோபோட்டிக் இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றியும் `செபி’ ஆராய்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் முதலீட்டு ஆலோசகர்கள் அவர்களது வாடிக்கையாளருக்கு வழங்கக் கூடிய `ப்ரீ டிரையல்’ சலுகை களையும் தடைசெய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் முதலீட்டு ஆலோசனை களை வழங்குவதற்கு விரிவான விதிகளையும் `செபி’ பரிந்துரை செய்துள்ளது. பங்குச்சந்தை குறித்த தவறான விளம்பரங்களை சோதனையிடவும் அல்லது மக்களுடைய முதலீட்டு முடிவு களில் தாக்கம் செலுத்துவதை சோதனையிடுவதற்கும் விரிவான விதிமுறைகளை `செபி’ பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் போட்டிகள், விளையாட்டுகள், பங்குச் சந்தை தொடர்பான தொடர்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம் தொடர்பான தொடர் களுக்கு பின்னார் பாலிவுட் பிரமுகர்கள் உள்ளனர். இவர்கள் யாரும் `செபி’ விதிமுறைகள்படி பதிவுசெய்து கொள்ளவில்லை.
இந்த பரிந்துரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பங்குதாரர் களிடம் `செபி’ கருத்துகளை கேட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். மேலும் மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் மற்றும் பிற பதிவுசெய்யப்பட்ட பங்குச்சந்தை இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் விலக்குகள் குறித்து `செபி’ மறுபரிசீலனை செய்து வருகிறது.
கடந்த மாதம் செபியின் நிர்வாகக் குழு இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரும் நோக்கத்துடனும் முதலீட்டு ஆலோசனைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடனும் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.