

வர்த்தகம் உட்பட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (எப்டிஐ) ஊக்குவிப்பதற்காக எப்டிஐ விதிகளை மேலும் தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்கெனவே இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒற்றை பிராண்ட் தயாரிப்புகளை வர்த்தகம் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதை மறு ஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய அரசு தகவல்தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைத் தளர்த்துவதற்கு ஆலோசித்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் எப்டிஐ விதிகளை தளர்த்தியது. இந்த ஆண்டு ஜூன் மாதம், விமான போக்குவரத்து, உணவு பதப்படுத்துதல், பார்மசூடிகல்ஸ் ஆகிய துறைகளில் எப்டிஐ விதிகளை தளர்த்தியது.
மத்திய அரசு பல்வேறு துறைகளில் உள்ள சில முக்கியமான கொள்கை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய முயற்சித்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட போதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அதை களைய வேண்டும் என்று மத்திய தொழி்ல்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக் சமீபத்தில் தெரிவித்தார்.