

தொடர்ந்து இரண்டு நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று ஏற்றம் காணப்பட்டது. பார்மா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவன பங்குகள் அதிக விலைக்கு விற்பனையானதே உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
பங்குச் சந்தையில் 37 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25099 ஆனது. தேசிய பங்குச் சந்தையில் 15 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7508 புள்ளிகளானது.
இரண்டு நாள் வர்த்தகத்தில் பங்குச் சந்தையில் 306 புள்ளிகள் அளவுக்கு குறியீட்டெண் சரிந்தது குறிப்பிடத்தக்கது. சன் பார்மா 3.97%, டிசிஎஸ் 3.85%, சிப்லா 2.59%, ரெட்டீஸ் லேப் 1.93%, விப்ரோ 1.90% அளவுக்கு உயர்ந்தன. ஹிண்டால்கோ நிறுவன பங்கு 2.63%, பிஹெச்இஎல் 2.57%, பார்திஏர்டெல் 2.08%, ஸ்டெர்லைட் 1.78%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 1.69% அளவுக்குச் சரிந்தன.
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானின் நிகி பங்குச் சந்தை 1.39 சதவீதமும், சீனாவின் ஷாங்காய் 0.11 சதவீதமும் சரிந்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச் சந்தை 0.10% அளவுக்கு ஏற்றம் பெற்றது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,715 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,281 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,361 கோடியாகும்.