வெளிநாட்டு சொத்து விவரத்தை ஒரு மாதத்துக்குள் அளிக்க மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு சொத்து விவரத்தை ஒரு மாதத்துக்குள் அளிக்க மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள விஜய் மல்லையா தனது அயல்நாட்டு சொத்து விவரங்களை 4 வாரங்களில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிட்டன் நிறுவனமான டியாஜியோவிலிருந்து விஜய் மல்லையா பெற்ற 40 மில்லின் டாலர்கள் தொகைக்கான விவரங்களை அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

“எங்களது ஏப்ரல் 7 உத்தரவின் படி முழு விவரம் அளிக்கப்படவில்லை (விஜய் மல்லையா). அதாவது ஒட்டுமொத்த சொத்து விவரமும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம், குறிப்பாக 40 மில்லியன் டாலர்கள் தொகை விவரங்களையும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம் ஆனால் தெரிவிக்கப்படவில்லை என்று அறிகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த 40 மில்லியன் டாலர்கள் தொகை விவரங்கள் உட்பட அனைத்து அயல்நாட்டு சொத்து விவரங்களையும் மல்லையா தெரிவிக்க 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் அடுத்த விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஜூலை 25-ம் தேதியன்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி உச்ச நீதிமன்றத்தில் கூறும்போது, மல்லையா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரங்களில் தவறான தகவல்கள் இருப்பதாக கூறியதையடுத்து மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் மல்லையா, தான் 1988-ம் ஆண்டு முதல் என்.ஆர்.ஐ எனவும் இதனால் வங்கிகள் தனது சொத்து விவரங்களை கேட்கும் உரிமை கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

என்.ஆர்.ஐ. என்பதால் அயல்நாட்டு சொத்து விவரங்களை அளிக்க வேண்டிய தேவையில்லை என்று மல்லையா மறுத்திருந்தார். தனது மனைவி, 3 வாரிசுகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், எனவே அவர்கள் சொத்து விவரங்களை கேட்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு மாத காலத்திற்குள் மல்லையா தனது அயல்நாட்டு சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in