Published : 19 Aug 2022 08:03 PM
Last Updated : 19 Aug 2022 08:03 PM

பொருளாதாரப் பயணம்: வாஜ்பாய் Vs மன்மோகன் Vs மோடி - ஒரு விரைவுப் பார்வை

புதிய நூற்றாண்டில் இந்தியா: புதுப்பொலிவுடன் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியா அடியெடுத்து வைத்தது. 1998-2004 வரையில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தாராளமயமாக்கத்தை முடுக்கிவிட்டார். தங்கநாற்கர சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் வழியே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது.

இந்திய நகர்புறங்கள் நவீனமடையத் தொடங்கின. மென்பொருள் துறை இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது. வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்புக் கொள்கையானது, இந்தியாவில் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரும் வளர்ச்சி காண்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

மன்மோகன் காலம்: வாஜ்பாயைத் தொடர்ந்து, 2004-ல் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். அடுத்தப் பத்து ஆண்டுகள் பிரதமராக அவர் தொடர்ந்தார். 1991-ல் போடப்பட்ட பாதையிலே இந்தியாவின் பொருளாதாரப் பயணம் தொடர்ந்தது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை அவர் கொண்டுவந்தார்.

2006-ல் இந்தியா உச்சபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்டியது. ஜிடிபி வளர்ச்சி 9 சதவீதத்தை தொட்டிருந்தது. 2007-2008 –ல் சர்வதேச அளவில் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மோசமான சரிவைக் கண்டது. இந்த நெருக்கடியிலிருந்து மன்மோகன் சிங் தனது பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவை மீட்டெடுத்தார்.

டிஜிட்டல் இந்தியா: 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகான எட்டு ஆண்டுகளில், இந்தியா பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ‘அரசின் வேலை நாட்டை நிர்வகிப்பதுதான். நிறுவனங்களை நடத்துவதல்ல’ என்ற கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் விற்கும் முயற்சிகளை மோடி தீவிரமாக தொடங்கிவைத்தார். அதன் உச்சபட்ச நகர்வாக, தற்போது நாட்டின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளில் உள்நாட்டு தொழிற்செயல்பாடுகளை ஊக்குவிக்க பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்பட்டது. நிறுவன வரி குறைக்கப்பட்டது. 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக மாற்றப்பட்டன.

மோடியின் மூன்று பொருளாதார அறிவிப்புகள் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பணமதிப்பிழப்பு (2016), ஜிஎஸ்டி (2017), மூன்று வேளாண் சட்டங்கள் (2020). பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையின் நீட்சியாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியது. 2015-16 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜிடிபி, 2019-20 நிதி ஆண்டில் 4 சதவீதமாக சரிந்தது.

மோடியின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த இரு முக்கியமான மாற்றங்களாக டிஜிட்டலை நோக்கிய நகர்வையும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பெருக்கத்தையும் குறிப்பிட முடியும். இணையத்தின் ஊடுருவலையும் ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, டிஜிட்டலை நோக்கிய நகர்வை மோடி தீவிரப்படுத்தினார். கடந்து எட்டு ஆண்டுகளில் அரசு சேவைகள், வர்த்தகம், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் நிகழ்ந்த டிஜிட்டல்மயமாக்கம் இந்தியர்களின் அன்றாடத்தை மேம்படுத்தியது.

யுபிஐயானது இந்தியாவின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. டிஜிட்டல்மயமாக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. இன்று இந்தியாவில் 75,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களால் பல தளங்களில் பொருளாதார வாய்ப்புகள் தூண்டப்பட்டுள்ளன.

கரோனா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும்,விரைவிலே நாடு அதிலிருந்து மீளத் தொடங்கியது. தற்போது பணவீக்கம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகிய நெருக்கடிக்கு மத்தியிலும், உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

> இது, இந்து தமிழ் திசையில் முகமது ரியாஸ் எழுதிய ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x