Published : 18 Aug 2022 11:12 PM
Last Updated : 18 Aug 2022 11:12 PM
மும்பை: மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இஐவி 22 என பெயரிடப்பட்டுள்ள, இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு, அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை போக்குவரத்து தீர்வுகள் மீதான வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருவதால், மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசின் தொலைநோக்கு, கொள்கைகள் உள்ளது.
மும்பையின் நாரிமன் பாயிண்ட், தில்லியை இணைப்பதற்கான 70 சதவீத பணிகள் ஏற்கனவே, முடிந்துள்ளது. மின்சார சொகுசு பேருந்துகள் மூலம், மும்பை முதல் தில்லி வரையிலான பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது. கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மூலம் 35 சதவீத மாசு ஏற்படுவதால், மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா உபயோகப்படுத்துவதற்கான நேரம் இது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இ ஐ வி 22 பேருந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சார இரட்டை அடுக்கு பேருந்து. இதில், பயணிகளின் பாதுகாப்புக்காக அதிநவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT