குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்

குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு நடப்பு 2022 - 23 நிதியாண்டு முதல் 2024 - 25 வரை, ரூ. 3 லட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022 - 23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின், குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதிநிலையையும் சாத்தியத் தன்மையையும், உறுதி செய்யும்.

குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதால், வேலைவாய்ப்பு உருவாகவும் வழிவகுக்கும். உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in