

புதுடெல்லி: அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ.50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், இந்தத் திட்டத்தின்கீழ், அளிக்கப்படும் ரூ.4.5 லட்சம் கோடி, கடனுதவி ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விருந்தோம்பல், அதனைச் சார்ந்த துறைகள் பயன்பெறும். கோவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்டெடுக்க உதவும் வகையில் இந்தக் கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2022, ஆக.5-ம் தேதி வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
அவசர கால கடனுதவி திட்டம் மார்ச் 31, 2023 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.