சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்வு: ஆட்டோ, வங்கி துறை பங்குகள் ஏற்றம்

சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்வு:  ஆட்டோ, வங்கி துறை பங்குகள் ஏற்றம்
Updated on
2 min read

இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் ஏற்றமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்து 28243 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 126 புள்ளிகள் உயர்ந்து 8738 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 30 பங்குகளும் 1.35 சதவீதம் ஏற்றம் கண்டன. தேசிய பங்குச் சந்தை 1.47 சதவீதம் வரை உயர்ந்தது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டிக் குறைப்புக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால் வங்கித்துறை பங்குகள் விலை உயரத் தொடங்கியது. இதனால் நிப்டி பேங்க் குறியீடு 303 புள்ளிகள் உயர்ந்தது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை அதிகரித்துள்ளது தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியானதை முன்னிட்டு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் முதல் நிதிக் கொள்கை கூட்டம் நாளை நடைபெறுகிறது. முக்கியமாக மாற்றியமைக்கப்பட்ட கொள்கை முடிவெடுக்கும் குழுவின் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் குறைந்தபட்சம் 0.25 சதவீத அளவிற்காவது வட்டிக் குறைப்பு அறிவிப்பு இருக்கும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். முக்கியமாக 60 வல்லுநர்களிடம் இது குறித்து கேட்கப்பட்ட கருத்துகளில் சுமார் 44 பேர் சாதகமான முடிவுகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டது. இண்டஸ்இந்த் வங்கி, இந்தியன் வங்கி, ஆக்ஸில் வங்கி பங்குகள் 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை லாபம் கண்டன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 1.5 சதவீதம் வரை உயர்ந்தது. இந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவி காலத்தை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளதும் முக்கியமாக கவனிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் மோட்டார் வாகன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதை முன்னிட்டு ஆட்டோமொபைல் குறியீடும் அதிகரித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் 3.72 சதவீதம் அதிகரித்தது.

ஐஷர் நிறுவனப் பங்குகள் 3.90 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.71 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.11 சதவீதமும் விலை உயர்ந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் சராசரியாக 2.5 சதவீதம் ஏற்றம் கண்டன. அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பங்கான ரிலையன்ஸ் இன்ப்ரா 7.98 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தைகளின் வர்த்தக நிலவரமும் ஏற்றத்தில் காணப்படுவதும், இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது என்று சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in