

மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
84 வயதான ரத்தன் டாடா சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தனிமையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறுதுணை சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை சாந்தனு நாயுடு என்பவர் நிறுவியுள்ளார். 28 வயதான அவர் ரத்தன் டாடாவின் உதவியாளராகவும் உள்ளார்.
தனிமையில் யாரும் இன்றி வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அவர் துவக்கியதுதான் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் முயற்சி. இந்த வகையிலான சேவை வழங்குவதில் இந்தியாவிலேயே முதல் நிறுவனம் இது என்று அறியப்படுகிறது. தெரு நாய்களுக்கு உதவும் வகையில் Motopaws என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் சாந்தனு தொடங்கி இருந்தார்.
தனிமையில் வசித்து வருபவர்கள் மட்டுமே உறுதுணையின் அவசியம் குறித்து அறிந்திருப்பார்கள் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சீனியர் சிட்டிசன்களில் சுமார் 50 மில்லியன் பேர் தனியாக இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.
திறமையான பட்டம் முடித்த இளைஞர்களை இந்த நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுடன் எமோஷனலாக தங்களை கனெக்ட் செய்து கொண்டு வேலை செய்யும் இளைஞர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்வதாக தெரிகிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு நண்பனை போல தினமும் உதவுவதுதான் இந்த இளைஞர்களுக்கு நிறுவனம் கொடுக்கும் டாஸ்க். தங்கள் நிறுவன கிளையண்ட்களுடன் வாக்கிங் செல்வது, செய்தித்தாள் வசிப்பது, கேரம் போர்டு விளையாடுவது, குட்டித்தூக்கம் கூட அந்த இளைஞர்களுக்கு டாஸ்க்காக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிறுவனம் முதற்கட்டமாக கடந்த ஆறு மாத காலமாக தனிமையில் இருக்கும் சுமார் 20 மூத்த குடிமக்களுக்கு தங்களது சேவையை வழங்கி வருகிறதாம். இப்போது இந்நிறுவனம் தனது சேவையை லான்ச் (Launch) செய்துள்ளது. புனே, சென்னை, மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் தங்களது சேவையை விரிவு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இந்தியா முழுவதும் இதனை கொண்டு வர விருப்பம்தான். இருந்தாலும் எங்கள் நிறுவன சேவையில் சமரசம் கூடாது என்பதில் தான் திட்டவட்டமாக இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட தங்கள் நிறுவன கிளையண்ட் மற்றும் பணி அமர்த்தப்படும் அந்த ஊழியருக்கு இடையேயான பிணைப்பு பேரக்குழந்தைகளுடன் மூத்த குடிமக்களுக்கு உள்ள பிணைப்பை போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு இது பெரிதும் உதவும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளதாக தகவல்.