

புதுடெல்லி: அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட்ட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
குஜராத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து உள்நாடுகளில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது அமுல் நிறுவனம். நாடு முழுவதும் மிகவும் பிரபலமான அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விலைப் பட்டியலின்படி, 500 மில்லி அமுல் கோல்ட் பால் இனி ரூ.35-க்கும், அமுல் தாசா ரூ.25-க்கும், அமுல் சக்தி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதர் டெய்ரி பாலும் விலையேற்றம்: அமுல் போல் மதர் டெய்ரி என்ற நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பால் ஒரு லிட்டர் இனி ரூ.61-க்கு விற்பனை செய்யப்படும். டோண்ட் பால் ஒரு லிட்டர் ரூ.51-க்கு விற்பனை செய்யப்படும். டபுள் டோண்ட் பால் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும். பால் பூத்களில் விற்பனை செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.48 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.