

உலகிலேயே அதிக பொருட் செலவில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்க இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் சைபீரியாவில் இருந்து இந்தியா வரை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது.
ரஷ்யாவின் எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 4,500 கி.மீ முதல் 6,000 கி.மீ வரை இந்தக் குழாய் பதிப்பு அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு குழாய் பதிக்க இமயமலை பாதை தான் குறுகிய தூரம் கொண்ட வழியாக கணக்கிடப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததால், இந்த வழி கைவிடப்பட்டது.
அடுத்தபடியாக இரான், பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளை கடந்து இந்தியாவுக்குள் குழாய் பதிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவும் இரான், பாகிஸ்தான், இந்தியா குழாய் வழியை விட அதிக செலவு கொண்டதாக கருதப்பட்டது. இதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது.
கடைசியாக ரஷ்யாவில் இருந்து சீனா, மியான்மர் வரை குழாய் பதித்து அங்கிருந்து வங்கதேசத்தை கடந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்தப் பாதைக்கான ஆரம்பக் கட்ட செலவு கணக்கிடப்பட்டதை அடுத்து ரஷ்யாவின் எரிவாயு நிறுவனமான கஸ்புரோமுடன் நேற்று முன் தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ரஷ்யாவில் இருந்து இந்தியா வரையிலான 6,000 கி.மீ தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்கான ஆய்வு தொடங்கவுள்ளது. குழாய் பதிக்கும் பணிக்கு தோராயமாக ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே நடந்த இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டின் போது இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி கிழக்கு சைபீரிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு, ரஷ்யாவின் எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பல நாடுகள் வழியாக குழாய் மூலம் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.