

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை கண்காணிக்கவும் மக்களின் புகார்களை விசாரிக்கவும் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது. அரசு சார்பிலே குழு அமைக்கப்படும் அல்லது சமூக வலைதள நிறுவனங்கள் தங்களுக்கான ஒழுங்குமுறை குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியது.
சுய ஒழுங்குமுறை குழுவை உருவாக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சம்மதம் தெரிவித்து இருந்தன. ஆனால், கூகுள் நிறுவனத்துக்கு சுய ஒழுங்குமுறை குழுவை உருவாக்க விருப்பமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உட்பட உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கூகுள், சுய ஒழுங்குமுறை குழு நல்ல முடிவு இல்லை என்று தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
சுய ஒழுங்குமுறை குழுவானது நிறுவனத்தின் முடிவுகளில் அதிகம் தலையிடும் என்றும் இதனால், மக்களின் சுதந்திரமும் நிறுவனத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்றும் கூகுள் கூறியுள்ளது. சுய ஒழுங்குமுறை குழுவின் சாதகம் குறித்து சொல்லப்படுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அது மிக மோசமான உதாரணமாகவே அமையும் என்றும் அந்தச் சந்திப்பில் கூகுள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன என்றும் பொய்ச் செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாசப் பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும், இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறி வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் சார்ந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நிறுவனங்கள் தனியே அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது மக்களின் மேல் முறையீட்டை விசாரிக்க ஒழுங்குமுறை குழு உருவாக்கும் முடிவுக்கு வந்துள்ளது.