

புவனேஸ்வர்: அதானி குழுமம் ரூ.41,000 கோடி முதலீட்டில் ஒடிசா மாநிலத்தில் அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கவுள்ளது. இதற்கு ஓடிசா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதானி நிறுவனம் மின் உற்பத்தி, துறைமுகம், விமானநிலையம், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உலோகத் துறையிலும் கால் பதித்துள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முந்த்ரா அலுமினியம் நிறுவனத்தைத் அதானி குழுமம் தொடங்கியது.
7 ஆயிரம் பேருக்கு வேலை
இந்நிலையில், தற்போது ரூ.41,000 கோடி முதலீட்டில் அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலை மூலம் 7,000 பேர் வேலை வாய்ப்புகள் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் ஆதித்யா பிர்லா மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், அந்தப் போட்டியில் தற்போது அதானி குழுமமும் இணைந்துள்ளது.
மேலும், 175 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தையும் ஓடிசா மாநிலத்தில் அதானி குழுமம் அமைக்க உள்ளது. இந்த இரண்டு ஆலைகளும் ஓடிசாவில் உள்ள ராயகடா மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
தற்போது அதானி 116 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.