

பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு அக் டோபர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வெளியாக இருக்கிறது. விலைப் பட்டையாக ரூ.750-775 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.3,000 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. திரட்டப்படும் தொகையை விரிவாக்க பணிகளுக்கு முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தற்போது 28 நகரங்களில் 48 கிளைகள் மட்டுமே இருக்கிறது. நிறுவனத்தை விரிவு செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகையில் நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என நிர்வாக இயக்குநர் சஞ்சய் குப்தா தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் 18 கிளைகள் தொடங்க இருப்பதாகவும், இதில் 6 கிளைகள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நகரங்களிலும், 12 கிளைகள் இரண்டாம் கட்ட நகரங்களில் தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிறுவனத்தின் பங்குகள் பஞ்சாப் நேஷனல் வங்கி வசம் 51 சதவீதம் இருக்கிறது. ஐபிஓவுக்கு பிறகு 39 சதவீதமாக இருக்கும். அதேபோல இன்னொரு நிறுவனரான கார்லே குழுமம் வசம் தற்போது இருக்கும் 49.6 சதவீத பங்குகள் 37 சதவீதமாக குறையும்.
கடந்த நிதி ஆண்டில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.327 கோடியாகும். செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.2,699 கோடி ஆகும்.