

2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதால், பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து தொழில்துறையினரது கருத்து களை நிதியமைச்சகம் கேட்டுள்ளது. பட்ஜெட்டில் வரிகள் மற்றும் அது தொடர்பான ஆலோசனைகளுக்காக தொழில் துறையினர் மற்றும் வர்த்தக அமைப்புகளோடு நிதியமைச்சகம் பேசியுள்ளது.
வரும் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 2-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே அறிவிக்க நிதியமைச்சகம் விரும்புகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் அறிவிக்கப்படும் நடைமுறையை இந்த ஆண்டு முதல் மாற்ற உள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ரயில்வே பட்ஜெட்டை யும் பொதுபட்ஜெட்டுடன் இணைக் கவும் முடிவு செய்துள்ளது. மேலும் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவுகளுக்கான தனியான அறிவிப்பையும் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளுடன் பேசியுள்ள நிதியமைச்சம் ‘நீங்கள் விரும்பும் வகையிலான பலன் கொண்ட’ பட்ஜெட்டுக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
நீங்கள் விரும்பும் வரி மாற்றங்கள் குறித்த கருத்துகள், வரி விகிதங்கள் குறித்த ஆலோசனைகள் குறிப்பாக நேரடி மற்றும் மறைமுக வரி குறித்த ஆலோசனைகள் மற்றும் அதற்கான பொருளாதார நியாயங்களையும் அளிக்குமாறு கேட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி வரை ஆலோசனை அளிக்குமாறு கேட்டுள்ளது.
தங்களது ஆலோசனைகள் மற்றும் பார்வைகள் பல வகையிலும் உதவும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இந்த விவரங்கள் உற்பத்தி, விலை, மற்றும் வருமான தாக்கம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளது. வரி அமைப்பில் மாற்றங்கள் குறித்த கோரிக்கைகள் பல்வேறு நிலையிலான மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியவசியமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
முன்கூட்டியே பட்ஜெட் அறிவிக்கப்படுவது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் நிதியமைச்சம் விரிவாக எடுத்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.