

புதுடெல்லி: சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மற்ற வணிக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் அறிவிக்கப்பட்ட அவசரகால கடன் உத்திரவாத திட்டம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில். நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் இரண்டு பெரிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன
அவசரகால கடன் உத்தரவாத திட்டம்: கோவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டும் வணிகத்தை தொடங்கவும், செயல்பாட்டுக்கான செலவை எதிர்கொள்ளவும் தகுதி வாய்ந்த எம்எஸ்எம்இ-களுக்கும், மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவிசெய்ய தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக மே 2020-ல் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2023 மார்ச் 31 வரை திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.
தற்சார்பு இந்தியா நிதியம்: வளர்ச்சியடைவதற்கான ஆற்றலையும், சாத்தியத்தையும் கொண்டுள்ள எம்எஸ்எம்இ-களின் சமபங்கு நிதியை கொண்டு வருவதற்காக தற்சார்பு இந்தியா நிதியத்தை மத்திய அரசு அறிவித்தது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.