ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு - வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. 2-வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. தற்போது மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாகி உள்ளது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் மொத்தமாக 1.4 சதவீத ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. மத்திய ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து இருந் தது. ஆனால், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு காலாண் டுகளுக்கு பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருக் கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2022-23 நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாகவும், பணவீக்கம் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in