

புதுடெல்லி: “இலங்கை, பாகிஸ்தான் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கு இருக்காது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.55 ஆக இருந்தது. தற்போது அது ரூ.80-ஐ தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ரூ.82-க்கு கீழ் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் , “இந்தியாவிடம் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. கையிருப்பை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்சினைகள் நமக்கு இல்லை. நமது வெளிநாட்டுக் கடன்களும் குறைவு.
சமீபத்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் டாலராக உள்ளது. 2021 மார்ச் இறுதியில் 21.2 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2022 மார்ச் இறுதியில் 19.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூலை 22ஆம் தேதிவரை இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன் டாலராக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “பணவீக்க உயர்விற்கு எரிபொருள் மற்றும் உணவு ஆகியவை முக்கியக் காரணியாக உள்ளது. பருவகால காரணங்களால் உணவு பொருட்கள் சார்ந்த பணவீக்கம் அதிகமாக உள்ளது. அது குறைய வாய்ப்புள்ளது” என்றார் அவர்.