

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தொழில் துறையினர் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஐஐ வெளியிட்டுள்ள தொழில்துறை தொடர்பான ஆய்வறிக்கையில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் எதிர்பார்ப்புகளும் மேலோங்கியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் அடங்கிய 150 தொழில்துறையினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
உற்பத்தி, சேவைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரிடமும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி கட்டுப்பட்டுள்ளது, பற்றாக்குறை குறைந்துள்ளது, ஏற்றுமதி அதிகரித்துள்ளது, அந்நிய முதலீடு அதிகரிப்பு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு உயர்ந்தது ஆகியன சிறந்த அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
2013-14-ம் ஆண்டில் 4.7 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2015-ல் 5.5 சதவீதத்தை எட்டும் என்றும் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் 5.5 சதவீதம் முதல் 6 சதவீத அளவுக்குள் கட்டுப்படும் என்றும் நம்பிக்கை உருவாகியுள்ளது. வரும் மாதங் களில் பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதோடு வர்த்தகம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களும் தங்களது உச்சபட்ச உற்பத்தியை அதிகரித்துள்ளன. இவையனைத்தும் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்றும் பானர்ஜி குறிப்பிட்டார்.