

கடந்த காலாண்டில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங் களில் 17 நிறுவன பங்குகளில் அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் ரூ.34,000 கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றனர். மாறாக 12 நிறுவனங்களில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் தகவல் கிடைக்கவில்லை.
இந்த காலாண்டில் (ஜூன் செப்டம்பர்) ஆக்ஸிஸ் வங்கியில் அந்நிய முதலீடு அதிகரித்திருக்கிறது. 4.94 சதவீதம் அந்நிய முதலீடு உயர்ந்திருக்கிறது. ஜூன் காலாண்டு இறுதியில் 45.81 சதவீதமாக இருந்த அந்நிய முதலீட்டாளர் பங்கு இப்போது 50.75 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 8.24 சதவீதமாக இருந்த அந்நிய முதலீட்டாளர் பங்கு, செப்டம்பர் இறுதியில் 12.86 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தற்போதைய விலை அடிப்படையில் ரூ.33,900 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். அதேபோல ரூ.6,180 கோடி அளவுக்கு விற்றிருக்கின்றன.
முக்கியமாக அதானி போர்ட்ஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களில் அந்நிய முதலீடு உயர்ந்திருக்கிறது. மாறாக ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ் மற்றும் கெயில் இந்தியா ஆகிய பங்குகளில் சரிந்திருக்கிறது.