

மும்பை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹாஷ்டேக் உடன் நெட்டிசன்கள் முழக்கமிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் இந்தியாவில் வருமான வரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும். அதனைக் கடந்தால் கூடுதலாக அபராதம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். இந்த நடைமுறையின்படி வருமானி வரி கணக்கை பயனர்கள் இப்போது தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான கெடு தேதி ஜூலை 31. இதனை பயனர்களுக்கு வருமான வரித் துறை நினைவூட்டி வருகிறது.
இந்நிலையில், கெடு தேதி முடிவதற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முயற்சித்து வரும் பயனர்கள் சிலர் வருமான வரித் துறை வலைதளத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். சிலரோ அதற்கான செய்முறை கொஞ்சம் கடினமானதாக உள்ளதாகவும் சொல்கின்றனர்.
கடந்த ஜூலை 27 வரையில் வெறும் 40 சதவீதம் பேர்தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. மறுபக்கம் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் பயனர் ஒருவர், இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு பயனர் ஃபார்ம் 10 ஃபைல் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார். “வருமான வரித் துறையின் வலைதளம் பராமரிப்பில் உள்ளது. ஆனால் துறையோ கெடு தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஊதியம் பெற்று வரும் நபர்களும் இதையே தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு தேதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.