

அழகு சாதனப் பொருள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஜெர்மனியின் நிவியா நிறுவனம் குஜராத் மாநிலம் சனாந்தில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனம் அமைக்க உள்ள முதலாவது ஆலை இதுவாகும்.
நிவியா இந்தியா நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த பெயர்ஸ்டார்ப் ஏஜி நிறுவனத்தின் அங்கமாகும். புதிய ஆலையோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் அண்ட் டி) மையமும் அமைக்க உள்ளதாக நிறுவ னத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் ரக் ஷித் ஹர்கேவ் தெரிவித்தார். ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குஜராத் தொழில்துறை மேம்பாட்டு கார்ப்பரேஷன் (ஜிஐ டிசி) புதிய ஆலைக்காக 72 ஆயிரம் சதுர மீட்டர் இடத்தை சனாந்தில் ஒதுக்கியுள்ளது. புதிய ஆலை 2015 மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும். தொடக்கத்தில் இந்த ஆலை 5 கோடி சரும பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த கிரீம்களை தயாரிக்கும்.
இந்தியச் சந்தையில் 1930-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிவியா இப்போதுதான் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இப்போது 60 சதவீத தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலை செயல்படத் தொடங்கியவுடன் இறக்குமதி அளவு குறையும் என்று ஹர்கவே கூறினார். இந்திய நுகர்வோருக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக் குவதற்கான ஆராய்ச்சியை ஆலையில் உள்ள மையம் மேற்கொள்ளும் என்றார்.