Published : 26 Jul 2022 09:39 PM
Last Updated : 26 Jul 2022 09:39 PM

விவசாயத்தை மாற்றி அமைக்கும் வேளாண் வணிகம் - ஒரு பார்வை

இந்திய வேளாண் துறையின் முகம் மாறிவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் 1960-களில் பசுமைப்புரட்சி ஏற்பட்டது. பசுமைப் புரட்சியைப் போலவே, தற்போது தகவல் தொழில்நுட்பங்களின் வரவு வேளாண் துறையைபுதிய தளத்துக்கு கொண்டு செல்கிறது.

விவசாயிகளுக்கு மானியத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்வது, வேளாண்மை சார்ந்த தகவல்களை செயலிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவது, ட்ரோன்மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது,செல்போன் மூலம் மோட்டாரை கட்டுப்படுத்துவது, நானோ தொழில்நுட்பம் மூலம் உரங்களைத் தருவது, வேலையை எளிதாக்கும் வேளாண் இயந்திரங்களின் புதுவரவு என்று புதிய தொழில்நுட்பங்களின் வரவுகள் நாளுக்கு நாள் இந்திய வேளாண் துறையை வளப்படுத்திவருகின்றன.

வேளாண் வணிகம்: வேளாண் துறையை வணிகத் தளத்தில் அணுகும் பார்வை இந்திய பொது சமூகத்தில் பரவலாக இருக்கவில்லை. தற்போதைய காலகட்டத்தில் மிகச் சாதாரண ஒன்றிலும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடிப்படையே இந்த அணுகுமுறைதான். அப்படித்தான் தற்போது வேளாண் துறையும் வணிகத் தளத்தில் பல்வேறு பரிமாணங்களில் அணுகப்படுகிறது. இது வேளாண் வணிகம் என்று வரையறுக்கப்படுகிறது.

வேளாண்மையில் பயிர் உற்பத்தி, விநியோகம், பண்ணை இயந்திரங்கள், பதப்படுத்துதல், விதை விநியோகம், சந்தைப்படுத்துதல் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றை வணிகப் பார்வையுடன் அணுகுவதுதான் வேளாண் வணிகமாகும்.

வேளாண் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்குவதோடு நிலைத்த நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தித்தரும் ஆற்றல் வேளாண் வணிகத்துக்கு உள்ளது. அந்த வகையில் வேளாண் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியின் அடித்தளம் வேளாண் வணிகமே ஆகும்.

Waycool, Ninjacart, Jumbotail, Gobasco,Ergos, Crofarm போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விவசாயி, உணவு பதப்படுத்துவோர், மொத்த விற்பனையாளர், சேமிப்புகிடங்கு வைத்திருப்போர் ஆகியோர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று மென்பொருள் மற்றும் செயலி மூலம்நல்லதொரு லாபகரமான பிணைப்பை ஏற்படுத்துகின்றன.

மாநில அரசுகளும் வேளாண் துறை சார்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகின்றன.

வணிகமாக்கல் என்பதைத் தாண்டியும், சில மாநிலங்கள் வேளாண் துறையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளைஅக்கறையுடன் மேற்கொண்டுவருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன முறையில் நூறு சதவீதமானியம் என்கிற வகையில் தமிழ்நாடுதனித்துவமான நிலையை அடைந்து வருகிறது.

இந்தியா கடக்க வேண்டிய தூரம்

எனினும், இந்தியா கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகமாக உள்ளது. தொழில்நுட்பரீதியாக இந்திய வேளாண் துறையை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பல மடங்கு பின்தங்கி இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் பல்வேறு பயிர்களிலும் உலா வந்து உற்பத்தியை பெருக்குகின்றன. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் மிகக் குறிப்பிட்ட பயிர்வகைகளிலே சாத்தியமாகி இருக்கிறது. இது வேளாண் தொழில்நுட்பம் அடிப்படையில் இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டக்கூடியதாகும்.

முன்னிருக்கும் சவால்கள்

தற்போது வேளாண் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கு ஏற்ப விவசாயிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது. புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலமே விவசாயிகள் தங்கள் துறையில் மேம்பட்டு பயணிக்க முடியும். இது வேளாண் துறையில் விவசாயிகளின் முன்னிருக்கும் சவால்களில் ஒன்று.

காலநிலை மாற்றம் வேளாண் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.

அதேபோல் விவசாயிகள் தங்கள் வேளாண் செயல்பாட்டை விரிவாக்க வேண்டும். அதாவது, விவசாயத்தில் இரண்டாம் நிலை செயல்பாடுகளாக கருதப்படும் வேளாண் சுற்றுலா, தேனீ வளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட முன்வர வேண்டும்.

முடிந்தவரையில் விவசாயிகள் மாற்றுப் பயிர் மற்றும் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். ஏனென்றால் இன்றும் சிறு தானியம் மற்றும் மூலிகை பயிர்களின் தேவை சந்தையில் அதிகம் தென்படுகிறது. இதற்கான சந்தை தொடர்பை அரசு விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

> இது, வேளாண் ஆராய்ச்சியாளர் வெ.சரத் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x