

2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கமாக ஐ.டி.ஆர் ஐடிஆர் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக தாக்கல் செய்வதை தவிர்க்க, முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்யுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பொதுவாகவே வரி தாக்கல் செய்ய கடைசி நாள் வரை காத்திருக்கின்றனர். கடைசி நேரத்தில் தாக்கல் செய்யும் போது, தேவையற்ற பதற்றம் காரணமாக தவறாக வரி தாக்கல் செய்ய நேரிடும்.
சரியான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முக்கிய சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அந்த ஆவணங்களை திரட்டவும், அதனை சரி பார்க்கவும் கால அவகாசம் மிகவும் அவசியம். அதற்கு முன்கூட்டியே தாக்கல் செய்வது மிகவும் தேவையான ஒன்றாகவுள்ளது.
கடைசி நாளன்று வரி தாக்கல் செய்யலாம் என எண்ணும் நிலையில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயன்படுத்துவதால் இணையதளத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படலாம். இதனால் ஏற்படும் இழப்புக்கு பொறுப்பேற்க நேரிடும்.
முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்யும் போது, மிகவும் நிதானமாக தாக்கல் செய்யலாம். மேலும் முன்னதாகவே தாக்கல் செய்வோருக்கு, தேவையற்ற வட்டி செலுத்துவதை தவிர்ப்பதுடன், விரைந்து ரீபண்டு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் வருமான வரி சட்டம் 234 ஏ,பி மற்றும் சி பிரிவின் கீழ், வட்டி விகிதம் மற்றும் 234 எஃப் பிரிவின் கீழ் தாமதமாக தாக்கல் செய்ததற்கான கட்டணத்தை தவிர்க்க இயலும்.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாத போது, அவர் மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்குரிய வரியுடன் செலுத்த வேண்டும். இது தவிர தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.