

புதுடெல்லி: வருமான வரியை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு பணியாளரும், நிறுவனமும் தங்களுக்கான வரிக் கணக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இம்மாதம் 31 ஆகும். வருமான வரிகாலக்கெடுவைத் தவறவிட்டால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் மற்றும் வரிப் பொறுப்புக்கு விதிக்கப்படும் வட்டி என அதிக அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று வருமான வரித்துறை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் கூறும்போது, “ஜூலை 20-ம் தேதி வரை 2.3 கோடி பேர்வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிரித்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் (2020-21) மொத்தம் 5.89 கோடி பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு டிச. 31-ம் தேதி வரை கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தரப்பட்டது.
எனவே, இந்த ஆண்டும் வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்ய அரசு கால அவகாசத்தை நீட்டிக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டில்வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படாது. தற்போது நாள்தோறும் 15 லட்சம் முதல் 18 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். வரும் நாட்களில் இது நாள்தோறும் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை செல்லும்" என்றார்.