

பிட்காயின் என்ற எண்ம நாணயத்தை (டிஜிட்டல் கரன்சி) கண்டறிந்தவர் பெயர் வெளியாகியுள்ளது. ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த கிரெய்க் ரைட் என்பவர்தான் பிட்காயினை கண்டுபிடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
2009 ஆண்டு சடோஷி நகமோடோ என்ற புனை பெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், உலகம் முழுவதும் பிட்காயின் நாணயத்தை பயன் படுத்தி பணம் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.
பிட்காயின் நாணயத்தை எந்த வொரு அமைப்பும் கட்டுப்படுத்தாது என்பதால் அதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் பிட்காயின் கண்டு பிடித்தவர் சடோஷி நகமோடோ என்ற ஜப்பானிய புனைப்பெயரில் இயங்கி வந்தார். அவரின் சுத்தமான ஆங்கிலத்தால் அவர் யார் என்ற மர்மம் நீடித்து வந்தது.
இந்நிலையில் கிரெய்க் ரைட் நான்தான் சடோஷி நகமோடோ என்ற உண்மையை பிபிசி மற்றும் தி எகானமிஸ்ட் போன்ற ஊடகங்க ளிடம் தெரிவித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப கோப்புகளை ஊடகங் களிடம் அளித்துள்ளார்.
பிட்காயின் பவுண்டேஷனுடைய நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜான் மாட்டின்ஸ் கூறுகையில், பிட்காயினை கண்டுபிடித்ததாக கூறும் கிரெய்க் ரைட் சமர்ப்பித் துள்ள ஆதாரங்களை கிரிப்டோ கிராபிக், சமூகம், தொழில்நுட்பம் என மூன்று கூறுகளில் சோதித்து பார்த்தேன். இவை மூன்றும் சரியாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் கரன்சி. மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. ரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிட்காயின்களை தனிப்பட்ட முறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட்காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது.
பிட்காயினின் மதிப்பு
இதன் மதிப்பு மற்ற நாணயங்களை போல கிடையாது. இதன் மதிப்பு ஏற்ற இறக்கத்துடனே இருக்கிறது. 2013-ம் ஆண்டு ஒரு பிட்காயினின் மதிப்பு 100 டாலர் அளவுக்கு உயர்ந்தது. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய ரூபாயில் 29,848.94 ஆக உள்ளது.