

வங்கிகளில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத அனைவருமே திருடர்களல்ல என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி வரை கடன் வைத்துள்ள விஜய் மல்லையா இந்தியா திரும்பவும் அவரிடமிருந்து கடனை வசூலிக்கவும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமைச்சரான கட்கரி ``கடனைத் திரும்பச் செலுத்தாத அனைவர் மீதும் ஏமாற்றுக்காரர்கள் முத்திரை குத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் மல்லையா மீதான நீதிமன்ற நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். அரசு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
கடன் வாங்கியவர்களின் நிறுவனம் வட்டிகளை முறையாக செலுத்தி வருகிறது என்றால் அந்த நேரத்தில் மக்களும் சரியான நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர். ஆலோசகர்களும் மேலாளர்களும் நல்ல நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர். ஏதாவது ஒரு நிறுவனம் சிக்களுக்குள்ளாகும்போது, அனைத்து நிறுவனங்களுமே இப்படித்தான் என்று கூறத்தொடங்கி விடுகின்றனர்.
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. குறிப்பாக சீனாவின் பொருளாதாரம் சரிவில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தொழில்துறை வளர்ச்சி சிறப்பாக இல்லை. ஆனாலும் உள்கட்டமைப்பு, சிமென்ட், உருக்கு உற்பத்தி துறைகளில் மத்திய அரசு தலையிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எல்லாம் சரியான நிலையில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த நிலையை மேம்படுத்தும் முயற்சிகளில் உள்ளோம். வங்கிகளின் நிலையும் தற்போது நல்ல நிலைமையில் இல்லை. இதனால் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் இல்லை. கடன்கார்களை ஆராய்கிறபோது ஒன்று நியாயமான தவறு அல்லது நியாயமில்லாத தவறு என்பதை பார்க்க முடிகிறது. பொதுவாக நேர்மையான மேம்பாடு சார்ந்த அணுகுமுறை கொள்ள வேண்டும். இந்த நிலையில் நியாயமான நிலையில் பணம் கட்டத் தவறியவர்களுக்கு அரசு உதவும். நேர்மையல்லாத முறையில் பணம் கட்ட தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.