

உலக அளவில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். தற்போது அதன் சந்தாதாரர்கள் அந்தத் தளத்தில் இருந்து தொடர்ந்து விலகி வருவதாக தகவல். அதற்கு உலக அளவிலான சந்தாதாரர்கள் அடுக்கும் காரணங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. கடந்த 1997 முதல் இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் தொடர்ச்சியாக சந்தாதாரர்களை இழந்து வருகிறது. இந்தச் சிக்கலை பல்வேறு உலக நாடுகளில் எதிர்கொண்டு வருகிறது நெட்ஃப்ளிக்ஸ். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் தங்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே பயன்படுத்த சந்தாதாரர்கள் தயாராகிவிட்டதன் போக்குதான் இது என சொல்லப்படுகிறது.
சந்தாதாரர்கள் சொல்லும் காரணங்கள்…
செலவு குறைக்க வேண்டி
"கடந்த ஆண்டு நான் ஒரு வீடு வாங்கினேன். அப்போது முதலே செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறேன். நான் மாதந்தோறும் சந்தா செலுத்தி பெற்று வரும் பயன்பாடுகள் குறித்து கணக்கிட்டு பார்த்தேன். அப்போது நான்கு விதமான ஸ்ட்ரீமிங் தளங்களை நான் பயன்படுத்துவதை அறிந்தேன். அதில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் கன்டென்ட்டுகளை நான் அரிதாக தான் பார்ப்பேன். ஆனால் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அதில் ஸ்ட்ரீம் ஆகும் அனைத்தையும் நான் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அப்படி இல்லை" என தெரிவித்துள்ளார் 26 வயதான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் லீப்பர்.
பெரும்பாலான பிரிட்டிஷ் குடும்பங்கள் ஸ்ட்ரீமிங் தளம் குறித்து இதையே தான் கருதுவதாக ஆய்வு நிறுவனமான Kantar தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் இந்த எண்ணம் அதிகரித்துள்ளதாகவும். 24 வயதுக்கு கீழானவர்கள் இந்த தளத்தின் சந்தாவை நிறுத்திக் கொள்ள விரும்புவதாகவும், அதற்கு மாற்றாக வேறு தளங்களை சப்ஸ்கிரைப் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான கன்டென்ட் மிஸ்ஸிங்?
உலகின் பிரபல ஸ்ட்ரீமிங் தளமாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து சந்தாதாரர்களை இந்த தளம் இழந்து வருவதால் அதன் பங்குகளின் மதிப்பு சரிந்துள்ளது.
ஸ்க்விட் கேம், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் மற்றும் பிரிட்ஜெர்டன் போன்றவை நெட்ஃப்ளிக்ஸில் ஹிட் அடித்தவை. இருந்தாலும் அதன் அண்மைய யுக்திகள் தான் இந்த சரிவுக்கு காரணம் என விமர்சகர் ஹேலி காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
"நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் கன்டென்டுகள் ரசிக்கும்படி உள்ளதா\ என்பதை சரிபார்க்கத் தவறியதுதான் இதற்கு காரணம். தரமான கன்டென்டுகள் இதில் இல்லை. இதன் போட்டியாளர்கள் கன்டென்டுகளுக்காக எடுக்கும் ரிஸ்க் மற்றும் அதற்காக செய்யும் செலவுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது பிரிட்டனில் அமேசான் பிரைம் தான் பிரபலம். அதில் ஸ்ட்ரீம் ஆகும் கன்டென்ட் ஹெச்.பி.ஓ போன்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்றவை" என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதத்தில் அமேசான் பிரைம் தளம் அதன் போட்டியாளர்களை காட்டிலும் பிரிட்டனில் அதிகளவில் சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக Kantar தெரிவித்துள்ளது.
கன்டென்ட் தரம் தான் இதற்கு காரணம் என சொல்கிறார் மற்றொரு பயனரான மேத்யூ ரோஸ். "நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒன்றிரண்டு கன்டென்டுகள் தான் தரமானதாக உள்ளன. மற்ற அனைத்தும் ப்ரீமியம் வகையில் இல்லை. நான் ஹிட் அடித்த எபிசோடுகளை பார்க்க காரணமே பலரும் அதுகுறித்து பேசுவதால் தான்.
நான் இப்போது டிஸ்னி+ மட்டுமே சப்ஸ்கிரைப் செய்துள்ளேன். மற்ற எந்த் ஸ்ட்ரீமிங் தளத்திற்கும் நான் சந்தா செலுத்தவில்லை. ஒப்பீட்டளவில் எனக்கு யூடியூப் தளத்தில் கிடைக்கும் ஆவணப் படங்களை பார்ப்பதில் தான் விருப்பம் அதிகம். ஏனெனில் அவை சுருக்கமான டைம் டியூரேஷனை கொண்டுள்ளன. இதனை கொஞ்சம் கூடுதல் நிமிடங்கள் வீடியோ ஸ்ட்ரீம் ஆகும் டிக்டாக் கன்டென்ட் எனவும் சொல்லலாம்" என அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் தனது சகோதரியின் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கை தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரிவுக்கான காரணங்கள்
நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளின் விலை சரிவு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். உலக அளவில் அதிகரித்து வரும் பணவீக்கமும் இதற்கு ஒரு காரணம். வாழ்வதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் டிவி மற்றும் சினிமா போன்றவை அத்தியாவசியமானது அல்ல.
மறுபக்கம் வணிக ரீதியாக போட்டி நிறுவனங்கள் வலுப்பெற்றதாக திகழ்வதும் நெட்ஃப்ளிக்ஸ் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது. டிஸ்னி முதல் பாராமவுன்ட் வரை, அமேசான் முதல் ஆப்பிள் வரை என போட்டி மிகக் கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் கரோனா பெருந்தொற்றும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தாதாரர்கள் தங்களது கணக்கு மற்றும் பாஸ்வேர்டை அடுத்தவர்களுடன் பகிர கடிவாளம் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.
மீட்டெடுக்க நெட்ஃப்ளிக்ஸ் வசம் உள்ள திட்டம்
குறைந்த சந்தா விலையில் விளம்பரங்களுடன் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டை பயனர்கள் பெறுகின்ற வகையில் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர நெட்ஃப்ளிக்ஸ் ஆயத்தமாகி வருகிறது. இருப்பினும் அதற்கான கட்டணம் குறித்த விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
நேற்றைய (ஜூலை 19) தரவுகளின்படி பார்த்தால் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 2 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. கடந்த 2021 வாக்கில் சுமார் 18 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றது இந்த தளம். அதை ஒப்பிட்டு பார்க்கும் போது இது வெறும் ஒரு சிறிய பங்கு தான். இப்போது 222 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
அமேசான் பிரைம் வீடியோ 175 மில்லியன் பார்வையாளர்களையும், டிஸ்னி பிளஸ் 118 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது. பெரிய அளவிலான எண்ணிக்கையில் பார்வையாளர்களை கொண்டிருந்தாலும் பிரிட்டனில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை இளம் தலைமுறையினர் பார்க்க தவறினாலும் அவர்களை காட்டிலும் வயதில் இளையவர்களான அடுத்த தலைமுறையினர் (குழந்தைகள்) இந்த தளத்தில் சிறுவர் பிரிவில் ஸ்ட்ரீம் ஆகும் வீடியோக்களை பார்த்து வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
| தகவல் உறுதுணை: பிபிசி |