

மும்பை: வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) மீது 8 ஆயிரத்துக்கும் மேலான புகார்கள் ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ளது. கடன் வசூல்தொடர்பாக இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் மோசமான அணுகுமுறைகள் குறித்த புகார்களும் இதில் அடங்கும்.
இது தவிர கடன் செயலி குறித்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
என்பிஎப்சிகள் செயலிகள் மூலமாக கடன் வழங்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. கடனைத் திரும்பப் பெறுவதற்கு ஏஜென்ட்களை நியமிக்கின்றன. இந்த ஏஜென்டுகள் கடனை வசூலிக்க வாடிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து செயலிகள் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராயவும், இதை முறைப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மிக அதிக அளவிலான புகார்கள் மகாராாஷ்டிர மாநிலத்திலிருந்தும், இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா,டெல்லி, ஹரியாணா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.
பெரும்பாலான புகார்கள்என்பிஎப்சி-க்கள் செயல்படுத்தும் கடன் செயலி தொடர்பானவையாகும். இவை பெரும்பாலும் பதிவுபெறாத மற்றும் தனி நபர்களால் செயல்படுத்தப்படுபவையாகும். இவை அனைத்தும் மிகஅதிகபட்ச வட்டி வசூலிப்பதாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்களை மிக மோசமாக நடத்தியதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி நிதித்துறையில் கடுமையான பாதிப்புகளை எந்தெந்த வகைகளில் ஏற்படுத்துகின்றன என்பதை கடந்த மாதம் ஒரு கருத்தரங்கில் பேசுகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கடன் வழங்குமுறைகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.