68 நகரங்களில் 2877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஃபேம் இந்திய திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் நாட்டின் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: "கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல் நிலையங்களுக்கு ஃபேம் 2-ம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 மின் திறனேற்றல் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2022 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 479 திறனேற்றல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 -ல் 'ஃபேம் இந்தியா' (FAME India) என்ற திட்டத்தை உருவாக்கியது. தற்போது, இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in