

புது டெல்லி: இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் அதிகளவிலான சந்தாதாரர்களுடன் நீடித்து வருவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்திற்கான அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 31 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவே ஏர்டெல் நிறுவனம் 10.27 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. மறுபக்கம் வோடபோன் ஐடியா நிறுவனம் 7.59 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இதே காலகட்டத்தில் இழந்துள்ளது.
கடந்த மே 31-ம் தேதி தரவுகளின் அடிப்படையில் ஜியோ நிறுவனம் 40.87 கோடி மொபைல் பயனர்களையும், ஏர்டெல் 36.21 கோடி மொபைல் பயனர்களையும், வோடபோன் ஐடியா 25.84 கோடி பயனர்களையும் கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாட்டின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மே மாதத்தில் 5.36 ஒயர்லஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது பிஎஸ்என்எல்.
கிராமம், நகரம் என அனைத்து பகுதியிலும் மொபைல் பயனர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது கிராமங்களில் 0.4 சதவீதமும், நகர பகுதியில் 0.13 சதவீதம் என்ற எண்ணிக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.