Published : 19 Jul 2022 06:04 AM
Last Updated : 19 Jul 2022 06:04 AM
மும்பை: சட்டவிரோத, கணக்கில் காட்டப்படாத பணப் புழக்கத்தையும் பரிவர்த்தனையையும் கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளில் பணம் செலுத்தும் விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் பெறுவது மற்றும் பணம் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) பிறப்பித்த உத்தரவின் படி ஒரு ஆண்டில் ரூ.20 லட்சத் துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் பான் அட்டை விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. எனினும் ஆண்டு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது இந்த வரம்பு ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மிக அதிக அளவில் பணத்தை எடுத்தாலும் அதற்கும் பான் மற்றும் ஆதார் விவரங்கள் தாக்கல் செய்யப்படவேண்டும்.
அதிகளவில் பணம் செலுத்துவோர் மற்றும் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பவர்கள் அதற்குரிய படிவத்தில் ஆதார், பான் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
பான் அட்டை இல்லாத தனி நபர்கள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய நேரிட்டால், அதற்கு முன்பாக பான் அட்டைக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
மத்திய அரசு துறைகளுடன் வரித்துறை இணைந்து புதிய விதிமுறைகளை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிதி மோசடி, முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற கூடாது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறுவதற்கும் இந்த வரம்பு பொருந்தும்.
இதன்படி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக தங்க நகை வாங்கினால் அதற்கு காசோலை தரலாம். அல்லது வங்கி பரிவர்த்தனை மூலம் தொகையை டிரான்ஸ்பர் செய்யலாம். கடன் அட்டை, டெபிட் கார்டு மூலமும் செலுத்தலாம்.
நன்கொடையாக ஒரே நாளில் ரூ.2 லட்சம் ரொக்கத்துக்கு மேல் பெறக் கூடாது. அவ்விதம் பெறப் பட்டால், பெறப்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும்.
வருமான வரி சலுகை பெறுவதற்கு மருத்துவக் காப்பீடு திட்டங்களில் ரொக்கத் தொகை செலுத்தி ரசீது பெற்றால் அது செல்லுபடியாகாது. காசோலை மூலமாக பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல சொத்து பரிவர்த்தனையில் ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை வங்கி பரிவர்த்தனை மூலம்தான் மேற்கொள்ள வேண்டும். வரி செலுத்தும் தனி நபர்கள், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்ததாகக் காட்டி வரி சலுகை பெற முடியாது.
போக்குவரத்துக்கு அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT