2021-22 ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் - ஜூலை 31-ல் அவகாசம் நிறைவு

2021-22 ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் - ஜூலை 31-ல் அவகாசம் நிறைவு
Updated on
1 min read

சென்னை: கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

விழிப்புணர்வு

இந்த நிலையில், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தாக்கல் செய்வதானால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வரும் டிசம்பர் வரை ரூ.5,000, ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மார்ச் மாதத்துக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

மின்னஞ்சலில் நினைவூட்டல்

கடைசி தேதிக்கு இன்னும் 2 வார அவகாசம் மட்டுமே உள்ளதால், இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வரி செலுத்துவோருக்கு இதுபற்றி குறுந்தகவல், மின்னஞ்சல் மூலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in