Published : 17 Jul 2022 09:10 AM
Last Updated : 17 Jul 2022 09:10 AM
பண்டல் செய்யப்பட்ட அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கோவை, திருப்பூர் மாவட்ட அரிசி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள் நிறைந்த பகுதி காங்கயம். அதேபோல ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரிசி ஆலைகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் மொத்த அரிசி விற்பனை மண்டிகளும் செயல்படுகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதித்து அறிவிக்கப்பட்டது. இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜி.எஸ்.டி. இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயரக்கூடும். ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயரும் என அரிசி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் விலை உயர்வால், நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மண்டி உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அரவையும், 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். போராட்டத்தை ஒட்டி, திருப்பூர் அரிசிக் கடைவீதியில் உள்ள ஏராளமான மொத்த வியாபார கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பல கோடி வர்த்தகம் பாதிப்பு
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள 400-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லரை அரிசி விற்பனை கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கோவை டவுன்ஹால் பகுதியில் வைசியாள் வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான அரிசி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து கோவை அரிசி கடை வியாபாரிகள் சங்கச் செயலர் சரவணக்குமார் கூறும்போது, "அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். அரிசி விலை உயர்வதுடன், வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்படுவர்" என்றார்.
பொள்ளாச்சி நகரில் நேற்று காலை முதல் அரிசி மண்டிகள் அடைக்கப்பட்டிருந்தன. மார்க்கெட் சாலை பகுதிகளில் அரிசி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து அரிசி மண்டி உரிமையாளர்கள் கூறும்போது, "அத்தியாவசியமான உணவுப் பொருளான அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். உணவுப் பொருட்கள் விலை உயரும். இதை கருத்தில்கொண்டு வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT