Published : 17 Jul 2022 06:12 AM
Last Updated : 17 Jul 2022 06:12 AM

ஏற்றுமதி, இறக்குமதிக்கு ரூபாய் மூலம் வர்த்தகம் - இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை

மும்பை: இந்தியாவில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் இனி ரூபாய் மூலமே வர்த்தகம் புரியலாம். இதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எடுத்துள்ளது.

தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு அவர்கள் அனுப்பும் தொகை டாலரில் அளிக்கப்படும். அதேபோல இறக்குமதியாளர்கள் அவர்கள் இறக்குமதி செய்யும் தொகையை டாலரில் அளிக்க வேண்டும்.

தற்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.79 என்ற நிலையில் உள்ளது. இதுவிரைவிலேயே ரூ.80ஐ தொட்டுவிடும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவரும் சூழலில் மாற்று திட்டமாக ரூபாயிலேயே பரிவர்த்தனை செய்யும் வசதியை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. விரைவிலேயே ரூபாய் மூலமாக வர்த்தகம் செய்யும் சூழல் உருவாகும்.

ரூபாய் மூலம் வர்த்தகம் மேற்கொள்ள ஆர்வம் காட்டும் நாடுகளை கண்டறிந்து, அத்தகைய நாடுகள் மற்றும் இந்தியாவில் அதற்குரிய வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் ரஷ்ய நிறுவனங்கள் அந்நாட்டு கரன்சியான ரூபிளில் பணம் செலுத்தும். அதேபோல ரஷ்ய நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் ரூபாயில் பணம் செலுத்தும்.

இவை பரஸ்பரம் அந்தந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். இவை வாஸ்ட்ரோ கணக்கு எனப்படும்.

ரஷ்யாவில் உள்ள வர்த்தகர் இந்தியாவில் உள்ள வர்த்தகருக்கு நேரடியாக பணத்தை செலுத்த மாட்டார். அவர் ரூபிளில் அங்குள்ள வங்கிக் கிளையில் பணம் செலுத்துவார். வாஸ்ட்ரோ கணக்கில் சேர்ந்த பணம், இங்குள்ள கிளை மூலமாக ரூபாயாக இந்திய வர்த்தகர் கணக்கில் சேர்க்கப்படும்.

இத்தகைய நடைமுறை மூலம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவது தடுக்கப்படும். இப்புதிய முறை மூலம் இறக்குமதியாளர்கள் டாலருக்கு பதில் ரூபாயை பயன்படுத்துவர். இதனால் ரூபாயின் மதிப்பு உயரும்.

இதன் மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையாமல் மதிப்புமிக்கதாக இருக்கும். மேலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதும் குறையும். இருதரப்பு வர்த்தகம் எளிதாகும்.

குறிப்பாக ரஷ்யா, ஈரான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் எளிதில் வர்த்தகம் புரியலாம். இதேபோல இலங்கைக்கு இந்தியா உதவி வழங்குவதை ரூபாய் மூலமாகவே மேற்கொள்ளலாம். இதற்கு முன்பு வரை டாலரில் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் ரூபாய் புழக்கத்து வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x