Published : 16 Jul 2022 07:17 AM
Last Updated : 16 Jul 2022 07:17 AM
புதுடெல்லி: உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி தேவை என்று உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூடிஓ) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
ஜி-20 மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெறுகிறது. அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஜி-20 மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய ஒருங்கிணைந்த நிதி மற்றும் தனியார் மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகி உள்ளது.
எரிசக்தி திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக புதுமையான கொள்கைகளை இந்தியா பின்பற்றி வருகிறது.மேலும், உலகளாவிய குறைந்தபட்ச வரி ஒப்பந்தத்திலிருந்து அர்த்தமுள்ள வருவாய் ஈட்டுவதை ஜி 20 நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாநாட்டையொட்டி `உணவுப் பாதுகாப்பின்மையைச் சமாளிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போர் காரணமாக பல நாடுகள் உணவுப் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. அந்த நாடுகளில் பசி அல்லது உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைக்க இந்தியா உதவ முடியும். ஆனால் உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) கட்டுப்பாடுகளால் இந்த உணவு தானியங்களை அந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. தேவைப்பட்ட நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு டபிள்யூடிஓ அனுமதி தரவேண்டும்.
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்படி, மானிய விலையில் தானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதால், அந்த நாடுகள் தங்கள் பொது இருப்புகளில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக சந்தைக்குக் கொண்டு வர முடியாது என்ற டபிள்யூடிஓ கட்டுப்பாடு விதித்துள்ளது. எங்களிடம் உள்ள உபரியான தானியங்களை ஏற்றுமதி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு டபிள்யூடிஓ அனுமதி தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT