

பெரும்பாலானவர்களுக்கு தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் சிலர் மட்டுமே புதிதாக நிறுவனம் தொடங்குகின்றனர். நீண்டகாலம் பணியில் இருக்கும் ஒருவர், பிறகு சந்தையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி வழிநடத்துவது என்பது அபூர்வம். அந்த வகையில் அபூர்வ மனிதராக தெரிகிறார் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வி.வைத்தியநாதன்.
பிர்லா இன்ஸ்ட்டியூட்டில் படித்த இவர், 1990-ல் சிட்டி பேங்கில் பணியில் சேர்ந்தார். பிறகு, 2000-ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் இணைந்தார். 32 வயதில் ஐசிஐசிஐ பர்சனல் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். 38 வயதில் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழுவில் இணைந்து, பின்னர் 41 வயதில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார்.
திடீரென வங்கிப் பணியில் இருந்து விலகி, ஏற்கெனவே செயல் பட்டு வந்த வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை, பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் முதலீட்டு உதவியுடன் வாங்கி, உயர்த்தியுள்ளார் வைத்தியநாதன். மும்பையில் உள்ள கேபிடல் பர்ஸ்ட் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். அவருடன் உரையாடியதில் இருந்து…
ஐசிஐசிஐ வங்கியில் முக்கிய பதவி யான இயக்குநர் குழுவில் இருந்த நீங்கள், திடீரென புதிய நிறுவனம் தொடங்க வேண்டியது ஏன்? ஒருவேளை ஐசிஐசிஐ வங்கியின் தலைமை பொறுப்புக்கு வர கூடுதல் காலம் ஆகும் என்பது காரணமா?
அப்போதைய நிலையில் எனக்கு 20 வருட கார்ப்பரேட் வாழ்க்கை இருந்தது. பல பலங்கள் எனக்கு இருந்தாலும், தலைமைப் பதவியை பொறுத்தவரை மிகவும் இளையவன்தான்.ஏற்கெனவே ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப் பில் இருந்திருக்கிறேன். அதனால் தலைமை என்பது எனக்கு புதிதில்லை. ஐசிஐசிஐ வங்கியை விட்டு வெளியே வரவேண்டும் என் பதும் என் எண்ணம் இல்லை. வேறு வங்கிக்கு செல்வதாக இருந் தால் அதற்கு நான் ஐசிஐசிஐ-யிலே இருந்திருப்பேன். பிரச்சினை ஐசிஐசிஐ கிடையாது.
20 வருடங்களுக்கு மேலாக சிட்டி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளில் முக்கிய பொறுப்பு வகித்தேன். இருந்தாலும் அதில் நான் ஒரு பணியாளர் மட்டுமே; தலைவர் கிடையாது. இந்தியா தொடர்ந்து வளர்ந்து வரு கிறது என்ற பட்சத்தில் நாம் ஏன் புதிதாக நிறுவனம் தொடங்கக் கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக உருவானதுதான் கேபிடல் பர்ஸ்ட்.
புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பதிலாக, ஏற்கெனவே சந்தையில் இருக்கும் நிறுவனத்தை வாங்குவதற்கு என்ன காரணம்?
ஏற்கெனவே இருக்கும் நிறு வனத்தில் சவால்களும் இருந்தன, வாய்ப்புகளும் இருந்தன. அந்த நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கொடுத்தது வந்த தால் வாராக்கடன் அதிகமாக இருந்தது. இதுபோன்ற பல சவால்கள் இருந்தன. ஆனால், சவால்களை புறந்தள்ளிவிட்டு, அதில் உள்ள வாய்ப்புகளை மட்டுமே பார்த்தேன்.
அந்த நிறுவனத்திடம் என்பிஎப்சி உரிமம் இருந்தது. புதிதாக உரிமம் வாங்க முயற்சி செய்தால் பல மாதங்கள் வீணாகும். அடுத்து அந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனம். நிறுவன பங்கின் விலை ரூ.1,100-க்கு மேல் வர்த்தகமானது. பிறகு ரூ.100-க்கு கீழே சரிந்தது. இதுபோன்ற நிறுவனத்தை வாங்கி, லாபமீட்டும் நிறுவனமாக ஏன் மாற்றக் கூடாது என்று நினைத்தேன்.
அதற்காக அந்த நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை வாங்கி னேன். அதைத் தொடர்ந்து பெய்ன், பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட பிரை வேட் ஈக்விட்டி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். இறுதியாக வார்பர்க் பின்கஸ் நிறுவனம் முதலீடு செய்ய சம்மதித்தது.
லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது (டர்ன் அரவுண்ட்) என்பது சொல் வதற்கு எளிதாக இருக்கலாம். நடை முறையில் எப்படி இருந்தது?
திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முதல் 3 வருடங்கள் மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது. நிறுவனத்தின் அடிப் படை நடைமுறையே மாற்றி னோம். அதுவரை பெரிய நிறு வனங்களுக்கு மட்டுமே கடன் கொடுத்து வந்தார்கள், நான் பொறுப்பேற்ற பிறகு, சிறிய தொழில்முனைவோருக்கு கடன் கொடுப்பதைத்தான் முக்கிய திட்டமாக அறிவித்தேன். சிறிய தொழில்முனைவோரின் நோக்கம் சரியானது. அவர்கள் மிகவும் நேர்மையாக இருப்பார்கள்.
ஒரு மாதம் கடனை கட்ட முடியா விட்டால் அடுத்த மாதம் சரியாக கட்டிவிடுவார்கள். பெரிய நிறுவ னங்களுக்கு கடன் கொடுக்கும் பட்சத்தில், நம்மால் அவர்களுக்கு நேரடி பலன் இருக்காது. ஆனால், சிறு தொழில்முனைவோருக்கு இந்த தொகை மிகப்பெரிய உதவி யாக இருக்கும், நேரடி பலன் கொடுக்கும் என்பதால் அவர்களை நம்பி கடன் கொடுத்தோம். இப்போது எங்களுடைய வாராக் கடன் 1 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.
நிதித்துறையில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. சிறிய அளவில் நிறுவனங்களை தொடங்க முடியுமா?
நிச்சயம் முடியும். உற்பத்தித் துறையில் ஒரு நிறுவனம் தொடங்குவது சிரமம். ஆனால், நிதிச்சேவைகள் பிரிவில் எளிதாக களம் இறங்க முடியும். 10 கோடி ரூபாய் முதலீட்டில் எளிதாக நுழைய முடியும். வளர்வதற்கு சாத்தியமும் இருக்கிறது.
சிறிய வங்கி, பேமென்ட் வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் இருக்கிறதா?
நாங்கள் ஏற்கெனவே பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறோம். வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களை கொடுத்து வருகிறோம். புதிய திட்டங்கள் குறித்து யோசிக்கிறோம். இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை.
நீங்கள் பட்டியலிடப்படாத நிறுவன மாக இருந்தால், ஐபிஓ வெளியிட்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் நீங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனம். வார்பர்க் பின்கஸ் முதலீடு செய்து 4 வருடங்களுக்குமேல் ஆகி விட்டது. அவர்களுக்காக வெளியேறும் திட்டம் என்ன?
அதைப்பற்றி இப்போது கவலைப்படவில்லை. நிறுவனம் கஷ்டத்தில் இருக்கும்போதே பிரைவேட் ஈக்விட்டி முதலீடு கிடைத்தது. இப்போது நிறுவனம் பலமாக இருக்கிறது. அப்போது புதிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தை தேடலாம். இல்லை சந்தையில் விற்கலாம். இதை தேவையான சமயத்தில் முடிவு செய்வோம்.
karthikeyan.v@thehindutamil.co.in