5-ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் போட்டி

5-ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் போட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலைன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியநிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த விவரங்களை தொலைத்தொடர்புத் துறை நேற்று பட்டியலிட்டுள்ளது.

இம்மாதம் 26-ம் தேதி 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற உள்ளது. அலைக்கற்றைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. தங்களது நிலையை தக்கவைத்துக்கொள்ள ஒரே அலைவரிசையைப் பெறுவதில் நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடும் எனத் தெரிகிறது.

2022-ம் ஆண்டு நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு 600 மெகாஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற இம்மாதம் 19-ம் தேதி கடைசி நாளாகும். அதானி குழுமம் அலைக்கற்றையை ஏலத்திற்கு எடுத்து அதைதனியார் நெட்வொர்க் வசதியைவர்த்தகர்களுக்கென உருவாக்கவும், மின்சாரம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் ரூ. 4.5 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு சேவையில்ஈடுபடாத அதானி குழுமம் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பது விலையை நிர்ணயிப்பதில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் மொபைல் சேவையில் அதானி குழுமம் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை இது பிரகாசப்படுத்தியிருப்பதாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் அலைக்கற்றை பெற விண்ணப்பித்துள்ளதன் பின்னணி புரியவில்லை என தரச்சான்று நிறுவனமான கிரெடிட் சூயிஸ் குறிப்பிட்டுள்ளது. நேரடியாக பெற விரும்பினால் 100 மெகா ஹெர்ட்ஸ் சேவையை இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான கட்டணம் ரூ.31,700 கோடியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in