

இன்று சிறிய வர்த்தகர் முதல் பெரு வணிகர்கள் வரை தங்களுக்கு போட்டியாக நினைப்பது இ-காமர்ஸ் நிறுவனங்களைத்தான். இ-காமர்ஸ் நிறுவனங்களின் அதீத வளர்ச்சியால் பல சிறு வர்த்தகர்கள் தங்கள் தொழிலையே மூடும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஏகபோக போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஓஎன்டிசி (Open Network for Digital Commerce) எனப்படும் டிஜிட்டல் வணிகத்துக்கான பொது தளத்தை முன்னெடுத்துள்ளது. ஓஎன்டிசி இந்திய டிஜிட்டல் வணிகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓஎன்டிசி என்றால் என்ன, அது எப்படி செயல்படும் என்பதை அறிய கோ புரூகெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் வேம்பு நம்முடன் பகிர்ந்துகொண்டார்…
ஓஎன்டிசி-யை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
அமேசான் நிறுவனம் ‘கிளவுட் டை’ என்ற வர்த்தக நிறுவனத்தை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியுடன் இணைந்து உருவாக்கி, அதிலிருந்து பெருமளவு பொருள்களை தங்கள் தளம் மூலமாக விற்பனை செய்தது. சொந்தத் தயாரிப்பு என்பதால் அதை சலுகை விலையில் அமேசானால் கொடுக்க முடிந்தது. இதனால் உள்ளூர் வர்த்தகர்களின் தொழில் பாதிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்த்தகப் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. அதன் அதீத வளர்ச்சியின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை நிரந்தரமாக மூடிவிடும் நிலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில்தான் ஓஎன்டிசியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
வர்த்தக ஏற்றத்தாழ்வு பிரச்சினையை ஓஎன்டிசி எப்படி தீர்க்கப் போகிறது?
ஓர் உதாரணத்தோடு விளக்குகிறேன். வியாபாரிகள் தங்கள் பொருள்களை விற்க சந்தை, மண்டி போன்ற அமைப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அங்கு வியாபாரிகள் தங்கள் பொருள்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் அரசுக்கு ஒரு தொகையை வாடகையாக கொடுக்க வேண்டும். அந்தத் தொகை ஒப்பிட்டளவில் குறைவானது. இதுபோலதான் ஓஎன்டிசியும் செயல்படும்.
அதாவது, ஓஎன்டிசி இணையம் வழியாக வர்த்தகம் செய்வதற்கான ஒரு பொதுத் தளமாக செயல்படும். யார் வேண்டுமானாலும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓஎன்டிசி கட்டமைப்பைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்..
ஆதார் மற்றும் யுபிஐ வடிவமைத்து உருவாக்கிய நந்தன் நிலகேணி தலைமையில்தான் ஓஎன்டிசி கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓஎன்டிசி பற்றி புரிந்துகொள்ள வேண்டு மென்றால் முதலில் நாம் யுபிஐ கட்டமைப்பைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இன்று கடையில் பொருள் வாங்கிவிட்டு பலரும் தங்கள் மொபைல்போன் வழியாகத்தான் பணம் செலுத்துகின்றனர்.
யுபிஐ இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒரே குடைக்குள் இணைத்து அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது. யுபிஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் நாம் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடிகிறது. இதேபோலான ஒருங்கிணைப்பைத்தான் ஓஎன்டிசி செய்கிறது. இதில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓஎன்டிசி என்பது செயலி கிடையாது.
இதனால் வாடிக்கையாளர் உணவு தேவைக்கு ஸ்விகி, சோமோடோ போன்ற செயலிகளுக்குப் பதிலாக இதிலேயே தேர்வு செய்து ஆர்டர் செய்ய முடியும். ஊபர், ஓலா போன்று வாகன சேவையும் இதில் இடம்பெறும். அந்தவகையில் ஓஎன்டிசி என்பது முடிவற்றது; அழிவில்லாதது.
இந்தியாவில் சிறு வர்த்தகர்கள் டிஜிட்டல் வர்த்தகத்தை நோக்கி நகர்வது எந்த வேகத்தில் இருக்கிறது? தற்போதைய போட்டிச் சூழலை எதிர்கொள்ள சிறு வர்த்தகர்கள் என்ன செய்ய வேண்டும்?
தற்போது வியாபார இயங்குமுறை சிக்கலானதாக மாறியிருக்கிறது. கல்லாவில் இருக்கும் பணத்தை மட்டும் கொண்டு அன்றைய வருவாயை கணக்கிட்டுவிட முடியாது. சிலர் கார்டு மூலம் பணம் செலுத்தியிருக்கலாம். சிலர் யுபிஐ மூலம் பணம் செலுத்தியிருக்கலாம். இவையெல்லாவற்றையும் மனக் கணக்காக வைத்திருக்க முடியாது. இந்த இடத்தில் மென்பொருளைப் பயன்படுத்தும்போது வேலைச் சிக்கல் 40 சதவீதம் அளவில் குறையும்.
அதேபோல் விற்கும் பொருள்களுக்கான துல்லியமான தரவு நமக்கு கிடைக்கும். அதைப் பொறுத்து அந்தப் பொருள்களை அதிகம் வாங்கி விற்க முடியும். முன்னதாக ஒரு சிறிய கடையில் 400 பொருள்கள் இருந்தது என்றால், இப்போது அதே கடையில் 4,000 பொருள்கள் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
அவற்றை நிர்வகிக்க மென்பொருள் அத்தியாவசியமாகிறது. ஆனால், நம் சிறு வர்த்தகர்கள் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். எவ்வளவு சீக்கிரமாக சிறு வர்த்தகர்கள் டிஜிட்டலை நோக்கி நகர்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களது தொழில் தப்பிக்கும்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்