Published : 10 Jul 2022 06:26 AM
Last Updated : 10 Jul 2022 06:26 AM

2021-22ம் நிதி ஆண்டில் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.13 ஆயிரம் கோடி எட்டி சாதனை - தனியார் பங்களிப்பு 70 சதவீதம்

புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 2021-22ம் நிதி ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச ராணுவ ஏற்றுமதி இதுவாகும் என்று கூடுதல் செயலர் (பாதுகாப்பு உற்பத்தி) சஞ்சய் ஜாஜு தெரிவித்துள்ளார். இது தவிர நடப்பாண்டில் ரூ. 2,770 கோடி மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான ராணுவ தளவாடங்களை விட இது ஐந்து மடங்கு அதிகம். 2015-15-ம் நிதி ஆண்டில் நாட்டின் ராணுவதளவாட ஏற்றுமதி ரூ.2,059 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

75 தளவாடங்கள்

இந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் (ஏஐ) தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட தளவாடங்கள் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வர உள்ளன. இது குறித்து கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு மத்திய ராணுவ தளவாட உற்பத்தி துறை ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள், சேவைத் துறை மற்றும் ஆய்வு நிறுவனங்கள், இத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க சிந்தனையில் உருவான செயற்கை நுண்ணறிவு நுட்பத்திலான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சி குறித்து பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் கூறும்போது, ‘‘இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 75 செயற்கை நுண்ணறிவு நுட்பத்திலான புதிய தயாரிப்புகள் இடம்பெறும். இவை அனைத்தும் முதல்முறையாக ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன’’ என்றார்.

இவை பெரும்பாலும் தானியங்கி, ஆளில்லா முறையில் செயல்படுபவையாகும். மேலும் சைபர் செக்யூரிடி, மனித செயல்பாடு, நுண்ணறிவு கண்காணிப்பு, லாஜிஸ்டிக்ஸ், விநியோக முறை, குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் செயல்படக் கூடியவை. கண்ட்ரோல், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் மற்றும் இன்டெலிஜென்ஸ், கண்காணிப்பு சிஸ்டம் மற்றும் பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவையாக விளங்குகின்றன.

இக்கண்காட்சியில் 75 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டாலும், 100-க்கும் அதிகமான புதிய தயாரிப்புகளின் உருவாக்கம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்குப் போட்டி

அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் குறித்த போட்டிகளும் நடைபெற உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் கண்டறியும் தீர்வுகள் ஆய்வுக்குட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த மூன்று சிந்தனைகள் தேர்வு செய்யப்பட்டு 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x