காப்பீட்டுத் திட்டங்களை பெற சிட்டி யூனியன் வங்கி - ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஒப்பந்தம்
சென்னை: சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் இடையே நேற்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை நாடு முழுவதுமுள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மோட்டார், தனிநபர் விபத்து, வீடு மற்றும் பயணம் தொடர்பான தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களையும், சொத்து மற்றும் பொறியியல் தொடர்பான வணிகக் காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கிளைகளிலே எளிதாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான காமகோடி கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீடு அல்லாத மற்ற காப்பீடுகளை மிக எளிதாக பெற முடியும்’ என்று தெரிவித்தார்.
