

புதுடெல்லி: சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய நிறுவனங்களும் சமையல் எண்ணெய்களின் விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. லிட்டருக்கு ரூ.10 என்ற அளவில் விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உணவுத்துறை செயலர் சுதன்சு பாண்டே கூறுகையில் ‘கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய்களின் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்று இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவித்தோம். ஒரு வாரத்துக்குள் பாமாயில், சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உட்பட சமையல் எண்ணெய்களின் விலையில் லிட்டருக்கு ரூ.10 வரையில் குறைப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். தற்போது ஒரே பிராண்டின் விலை பிராந்தியங்களுக்கு ஏற்ப ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபடுகிறது. நாடு முழுவதும் ஒரே விலையை பராமரிக்கும்படி அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டால், உணவுப் பொருட்கள் சார்ந்த நாட்டில் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.