

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஜூலை 1 -ம் தேதி சிறப்பு வரி விதித்தது. இந்த வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.94,800 கோடி (12 பில்லியன் டாலர்) வரி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் தெரிவித்துள்ளது.
எதிர்பாராதவிதமாக ஒரு துறைசார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதிக லாபம் ஈட்டும்போது அந்த லாபத்துக்கு அரசு சிறப்பு வரி விதிக்கும். இந்த திடீர் வரிவிதிப்பு ‘விண்ட்ஃபால் டேக்ஸ்’ (windfall tax) என்று அழைக்கப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டிவருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு சிறப்பு வரி விதித்துள்ளது.
அதன்படி உள்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலுக்கு ரூ.6, டீசலுக்கு ரூ.13 சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஒரு டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு ரூ.6 வரி குறைப்பு செய்தது. இதனால், மத்திய அரசின் வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய சிறப்பு வரியால் இந்த இழப்பு ஈடு செய்யப்படும் மூடி’ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு வரியால் இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் குறையும் என்றும் மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பீப்பாய் கச்சா எண்னெய் 40 டாலருக்கு கீழாக குறையும் வரையில் ஏற்றுமதி மீதான சிறப்பு வரி நீடிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.