பங்குச் சந்தையில் 251 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தையில் 251 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

இயற்கை எரிவாயு விலை நிர்ணயிப்பதை மூன்று மாதங்களுக்கு தள்ளிவைப்பதென மத்திய அமைச்சரவை புதன்கிழமை மேற்கொண்ட முடிவால் பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டது.

எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்கு விலைகள் கடும் சரிவைச் சந்தித்ததால் பங்குச் சந்தையில் 251 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 25062 என்ற நிலைக்குச் சரிந்தது.

ஜூன் 18-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு சரிவு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வர்த்தகம் முடிவில் ரியல் எஸ்டேட், வங்கித்துறை, உலோக நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதால் சரிவு மேலும் அதிகரித்தது.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை நாள் முழுவதும் சரிவு நிலையிலேயே காணப்பட்டது. எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்கு விலைகள் ஒரு சதவீதம் முதல் 5.89 சதவீதம் வரை சரிந்தன. இதில் குறிப்பாக ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி பங்கு விலைச் சரிவால் 150 புள்ளிகள் குறைந்தது.

ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, என்டிபிசி, கெயில் இந்தியா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.

தேசிய பங்குச் சந்தையில் 76 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7493 என்ற நிலைக்குச் சரிந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புதன்கிழமை ரூ. 694.63 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கியிருந்தன. அமெரிக்க பொருளாதாரம் கடந்த காலாண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக ஆசிய சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 0.27 சதவீதம் முதல் 1.45 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in