

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜனின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ் தெரிவித்திருக்கிறார்.
ராஜனின் பதவி காலம் வரும் செப்டம்பருடன் முடிவடைகிறது. அவரைப்பற்றி சர்ச்சைகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஆதி கோத்ரெஜ்.
மேலும் அவர் கூறும்போது, மற்றவர்கள் கூறிய கருத்துக்கு நான் எதிர்கருத்து கூற முடியாது. ராஜன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். உலகம் முழுவதும் அவருக்கு மதிப்பு இருக்கிறது. அவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது இந்தியாவுக்கு நல்லது.
உலகில் இருக்கும் மத்திய வங்கிகளில் சிறந்த கவர்னர் இவர் என்று சர்வதேச பத்திரிகைகள் (பைனான்ஸியல் டைம்ஸ் குழும நாளிதழ்) தேர்ந்தெடுத்துள்ளன. அவர் மீண்டும் வருவதை நான் விரும்புகிறேன், அவருடைய நீட்டிப்புக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன் என்று கோத்ரெஜ் கூறினார்.