Published : 04 Jul 2022 09:22 PM
Last Updated : 04 Jul 2022 09:22 PM

உணவு உண்டதற்கான ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக் கூடாது: மத்திய அரசு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு உண்டதற்கான விலை ரசீதில் சேவை வரி வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விதிகளை மீறி எந்த உணவகமாவது சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் முறையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சேவை வரி விதிப்பது தொடர்பாக தேசிய நுகர்வோர் உதவி எண்ணிற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x