

சென்னை: சுவிட்சர்லாந்தை தலைமையிட மாகக் கொண்ட குரிட் குழுமம் சென்னை ஒரகடத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் காம்போசைட் சொல்யூஷன் தயாரிப்பு ஆலையை அமைத்துள்ளது.
குரிட் நிறுவனம் 1835-ம்ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜவுளித் துறையில் கவனம் செலுத்திவந்த இந்நிறுவனம், அடுத்தடுத்த கால கட்டத்தில் ரப்பர், கண்ணாடி தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
தற்போது காற்றாலை, கப்பல்தயாரிப்பு, விமானத் தயாரிப்புக்குத் தேவையான காம்போசைட் மெட்டிரியல்களை தயாரிக்கிறது.
பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம, சென்னை ஒரகடத்தில் காம்போசைட் சொல்யூசன் தயாரிப்புக்கு என்று தனி ஆலையை திறந்துள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் காம்போசைட் சொல்யூசன் இந்நிறுவனத்தின் காற்றாலை பிளேடு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 ஏக்கரில் ஆலை: 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலை, குரிட் நிறுவனத்தின் காற்றாலை பிரிவு தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் மையமாக செயல்படும் என்றும் இந்த ஆலை மூலம் நேரடியாக 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய காற்றாலைத் துறையில் தனது வணிகத்தை விரிவுபடுத்த குரிட் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.