ரூ.1 லட்சம் கோடிக்கு நகைக்கடன்: எஸ்பிஐ வங்கி சாதனை வர்த்தகம்

ரூ.1 லட்சம் கோடிக்கு நகைக்கடன்: எஸ்பிஐ வங்கி சாதனை வர்த்தகம்
Updated on
2 min read

புதுடெல்லி: எஸ்பிஐ வங்கியின் தங்க நகை கடன் பிரிவு எப்போதும் இல்லாத அளவிற்கு ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம், இந்தியாவில் கோவிட்-19 தொற்று மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதனால் அந்த மாதம் 24-ம் தேதியிலிருந்து நாடெங்கிலும் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் பல்வேறு துறைகளும் முடங்கின.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக எந்த இயக்கமும் இல்லாமல் காணப்பட்டது. இதனால் தொழில்முனைவோர்கள், இந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் கடன் வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர்.

பெரும்பாலானவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், அன்றாட நிதித் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். குடும்பத்தின் தேவைகளுக்கு கடன் வாங்கி சமாளித்தனர். அந்த நேரத்தில் பெருமளவு நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது தங்க நகைக்கடன்.

வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழக்கமான வட்டி விகிதத்தில் இருந்து சற்றுக் குறைந்தது. அதேசமயம் எளிதாக கடன் வழங்கியதால் பலரும் தங்க நகைக் கடன்களை வாங்கினர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நாட்டின் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தங்கம் தான் மிகவும் சிறப்பான சொத்தாக பார்க்கப்படுகிறது. எனவே பெருமளவு மக்கள் நகைக்கடன் வாங்குவது அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ வங்கியின் தங்க நகை கடன் பிரிவு எப்போதும் இல்லாத அளவிற்கு ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் தாண்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க அடகு வர்த்தகத்தில் 25 சதவீதத்தை அந்த வங்கி கையில் வைத்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியதாவது:

தங்க கடனில் எஸ்பிஐ வங்கியின் வாராக் கடன் என்பது வெறும் 0.29 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் மற்ற கடன்களை விடவும் தங்க நகை கடனை வாங்குகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் ஜூன் காலாண்டில் அதிகப்படியான தங்க நகை கடன் வர்த்தகம் நடந்துள்ளது.

இந்தியாவில் தங்க கடனுக்கான தேவையும், வர்த்தகமும் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கியின் தங்க கடன் வர்த்தகம் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in