Published : 02 Jul 2022 12:41 PM
Last Updated : 02 Jul 2022 12:41 PM

சாம்பிள் மருந்து, பரிசுப்பொருட்கள்; மருத்துவர்களுக்கு 10% வருமான வரி: அமலுக்கு வந்தது

புதுடெல்லி: மருத்துவர்கள், சமூகவலைதளங்களில் பிரபலமானவர்கள் பெரும் பரிசுப்பொருட்களுக்கு 10 சதவீதம் வருமான வரியை முன்கூட்டியே பிடித்தம் செய்யும் டிடிஎஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் டிடிஎஸ் புதிய விதி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வருவாய் விவரங்கள் உரிய முறையில் கணக்கிற்குள் வருவதை உறுதிப்படுத்தும் விதமாக வருமான வரிச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி ஒருவர் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தொழில் ரீதியாக அல்லது வர்த்தக ரீதியாக பரிசு பொருட்கள் கிடைக்கப் பெற்றால் அந்த பொருட்களின் மதிப்பில் 10 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை சட்டத்தில் புதிய விதி சேர்க்கப்பட்டது.

பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற நபர்கள் ஜூலை 1 முதல் அவற்றைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும். மருத்துவர்கள் இலவச மருந்து மாத்திரைகளை மருந்து நிறுவனங்கள் கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த இலவச மருந்து மாத்திரைகளை மருத்துவர் விற்பனை செய்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருந்து நிறுவனத்தால் மருத்துவர்களுக்கு இலவச சாம்பிள் மட்டுமின்றி பரிசுப்பொருட்கள் கொடுத்தாலும் டிடிஎஸ் பிடிக்கப்பட்டு அது மருத்துவரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஒருவர் பிரபல நிறுவனங்களின் பொருளை பிரபலப்படுத்துவதற்காக ஒரு பொருளை பெற்று அதனை அவர் தக்க வைத்துக் கொண்டால், அந்த பொருளின் மதிப்புக்கு வருமான வரி சட்டத்தின்படி டிடிஎஸ் பிடிக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் அவர் அந்த பொருளை திரும்ப ஒப்படைத்து விட்டால் டிடிஎஸ் பிடித்தம் கிடையாது.

இதில் 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் டிடிஎஸ் பொருந்தும். 20 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

இதுபோலவே கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு 1% டிடிஎஸ் பிடித்துக்கொள்ளப்படும். கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல் டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனைக்கும் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x